சிறீலங்கா இராணுவம் மக்கள் காணிகளில் – அகதிகளான மக்கள் ஐ.நாவிடம் விக்கி

0
111


யாழ்.மாவட்டத்தில் அரச காணிகள் அதிகளவில் இல்லை. எனவே சிறீலங்கா இராணுவம் நிலை கொண்டுள்ள பகுதிகளை விடுவித்தால் மாத்திரமே முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்ற முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய பிரதி நிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் திருமதி டேசி டெல் உள்ளிட்ட குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள அகதிகள் தொடர்பாக விடயங்களை ஐ.நா குழுவினர் ஆராய்ந்தார்கள். தெல்லிப்பழையில் தற்போது அகதிகள் இருப்பதற்கான காரணம் மற்றும் அவர்களுக்கு என்ன நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடி யும் என்பது தொடர்பாக பேசியிருந்தார்கள்.
தொடர்ந்தும் சிறீலங்கா இராணுவம் அப்பகுதியில் இருப்பதால் தான் இவ்வாறான பிரச்சினைகள் வருகிறது. இராணுவ பிரசன்னத்தாலும் அவர்கள் காணிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதாலும் தான் மக்களுக்கு காணிகளை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் என அதிகம் இல்லை எனவே சிறீலங்கா இராணுவம் தற்போது நிலைகொண்டுள்ள இடங்களை விடுவித்தால் தான் மக்கள் தமக்கேற்ற இடங்களுக்கு போகக்கூடிய நிலைவரும் என சுட்டிக்காட்டியிருந்தேன். மேலும் இந்தியாவில் இருந்து வரும் அகதிகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்கள். எமது மக்கள் திரும்பவும் வருவதை வரவேற் றோம். ஆனால் அவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
சில இடங்களில் அவர்களின் காணிகளை தென்பகுதியினருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து அவர்களை வெளியேற்றாமல் மாற்று காணியாக தருவதாக அலுவலர்கள் கூறியுள்ளார்கள் என தெரிவித்திருந்தனர் இது அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக ஏற்பட்டுள்ளது என எடுத்துக் கூறினேன்.
அத்துடன் அகதிகள் இலங்கைக்கு வரும் போது விமானத்தில் வரும் போது 70 கிலோ கிராம் தான் கொண்டு வர முடியும். எடுத்து வரும் கிலோவின் அளவை கூட்டுவதற்கு அல்லது படகில் எடுத்துவருவதற்கான ஏற்றபாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.
பொதுவாக அகதிகளின் நிலை பற்றி ஆராய்வதற்கே வந்திருந்தார்கள். அதிலும் இலங்கை அரசு, அகதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள். அவ்வாறான் எண்ணத்தை வரவேற்கிறோம் ஆனால் அவர்கள் செய்வதாக கூறும் விடயங்கள் உண்மையில் நடைபெறுகிறதா என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்.
இந்தியாவில் தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெறுவதற்கான பாடசாலைகள் உள்ளதாகவும் இங்கு வந்தால் அந்த உதவி கிடைக்குமா என கேட்டார்கள். அவ்வாறான வற்றை தேடிப்பார்த்தால் ஓர் இரு பாடசாலைகளில் அவ்வாறான வசதி உள்ளது இருப்பினும் அத்தனை பேரையும் எடுப்பதற்கான வசதிகள் இல்லை.
எனவே குறித்த விடயத்தை நான் அப்போதைய இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருடன் பேசியபோது தெரிவித்திருந்தேன். இந்தியாவில் பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை எனவும் பெற்றோர் இங்கு வந்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அந்த வகையில் அவர்கள் கூடிய நன்மைகளை பெறக்கூடியதாக உள்ளது. எனவே அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் இட வசதிகளை இந்தியா-இலங்கை இணைந்து செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தேன் என முதலமைச்சர்ஊடகங்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here