இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று புதன்கிழமை ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது. அப்போது மண்டபம் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளிடமும் அந்த குழுவின் உறுப்பினர்கள் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய அக்குழுவின் தலைவர், சுதர்சன நாச்சியப்பன், மூன்று வகையான கருத்துக்களை அம்மக்கள் கூறியதாகக் தெரிவித்தார்.
மீண்டும் தங்களுடைய நிலம், வீடுகளை அரசு திரும்ப அளிக்க வேண்டும்; எந்தப் பிரச்சனையும் வராது என மாகாண அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; அப்படி இருந்தால் தாங்கள் திரும்பிச் செல்லத் தயார் என பெரும்பான்மையோர் தங்களிடம் கூறியதாக சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
மற்றொரு தரப்பினர், தங்கெளுக்கென அங்கே வீடு, நிலம் போன்றவை இல்லை; நாங்கள் திரும்பிச் சென்றால் வேலைவாய்ப்பு போன்றவற்றைச் செய்துதருவோம் என உத்தரவாதம் அளித்தால் திரும்பத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார்.
வேறு சிலர், தாங்கள் நீண்ட காலமாக இங்கேயே வசித்துவருவதால், தொடர்ந்து இங்கேயே வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் கூறியதாகவும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
தங்களுக்கு வீடு, நிலம் திரும்பியளிக்கப்பட்டு பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டால், 60 முதல்70 சதவீதம் இலங்கை அகதிகள் நாடு திரும்பத் தயாராக இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்திருப்பதாகவும் 10 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து இந்தியாவில் வசிக்க விரும்புவதாகவும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
இதற்கிடையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்புவது குறித்து நாளை வெள்ளிக்கிழமை நடப்பதாக இருக்கும் அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் ஒன்றை புதன்கிழமையன்று எழுதியுள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து நீடிப்பது, அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் தமிழர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இலங்கை அரசு உறுதியான நம்பத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான நடைமுறையை ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது சுமார் 34 ஆயிரத்து 500 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 55 அகதிகள் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 65 ஆயிரம் பேர் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 107 முகாம்களில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்கள், அரசிடம் பதிவுசெய்துகொண்டு, முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றனர்.