ஓய்வுபெறும் வைபவத்திலேயே கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இதனை தெரிவித்தார்.
2013 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தனக்கு விதிக்கப்பட்ட சட்ட விரோத தடை காரணமாக 746 நாட்கள் தன்னால் உயர் நீதிமன்ற நீதியரசராகவும், பிரதம நீதியர்சராகவும் செயற்பட முடியாது போனதாகவும் இந் நாட்களில் தான் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நிலமையை உணர்ந்ததாகவும் இதன் போது 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் இந்த வைபவத்தில் உயர் நீதிமன்றின் ஏனைய 10 நீதியரசர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகளும் கல்ந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் சட்ட மா அதிபர், சொலிசிற்ற ஜெனரல்கள், பிரதி சொலிசிற்ற ஜெனரல்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததுடன் சட்டத்தரணிகள் சம்ங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உத்தியோகபூரவ , உத்தியோகபூர்வமற்ற சட்டத்தரணிகள் என நூற்றுக்கணக்க்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த இரு வருடங்களாக அடிப்படையற்ற குற்றச் சாட்டுக்களை என்மீது முன் வைத்தனர். அதுமட்டுமன்றி எனது கணவர் பிரதீப் காரியவசம், மகன் ஷவீன் மற்றும் எனது இளைய சகோதரி ரேனுகா ஆகியோரை பல்வேறு விதங்களில் இன்னல்களுக்கு உட்படுத்தினர். என்னை இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கும், மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கும் இழுத்துச் சென்றனர். என்னை குற்றமற்றவர் என நிரூபிக்க நான் அங்கெல்லாம் செல்லவேண்டியிருந்தது.
இதன் போது என்னுடன் இருந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய உள்ளிட்ட அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் ஏனைய அனைத்து சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நான் இந் நேரத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.
746 நாட்களுக்கு பின்னர் நான் மீண்டும் கடமைகளுக்கு சமூகம் தந்துள்ளேன். என்னை சட்டத்துக்கு விரோதமான முறையில் செயற்பட்டு பிரதம நீதியரசராக செயற்படுவதை தடுத்தனர். எனினும் பொதுமக்கள் என்னையே நீதியர்சராக நம்பினர்.
1996 ஆம் ஆண்டு நான் முதன் முதலாக நீதியரசராக நியமனம் பெற்றேன். அன்ரு முதல் இன்று வரை 16 வருடங்கள் நான் நீதியர்சராக கடமைகளை தொடர்ந்துள்ளேன். 2011 ஆம் ஆண்டு நான் உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றேன். 2013 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் எனக்கு எதிரான நடவ்டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல சட்ட விரோதமான முறையில் எனக்கு தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் அதாவது, 746 நாட்களில் நான் மிகவும் புண்படுத்தப்பட்டேன். அந்த இரு வருடங்களிலும் எவ்வித ஆதரமும் இல்லாத குற்றச்சாட்டுக்கள் எனக்கெதிராக முன் வைக்கப்பட்டன. கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிப்பது போன்று ஒரு அழுத்ததுடனேயே அவற்றுக்கு நான் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அந்த காலம் முடிந்துவிட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
நான் தனிப்பட்ட விடயங்களுக்காக இந்த இரு வருடங்களும் போராடவில்லை. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காகவே இந்த போராட்டத்தை நான் முன்னெடுத்தேன். அதன்படி ஆரம்பத்திலிருந்து என்னுடன் கைகோர்த்திருந்த, அனியாயத்துக்கு எதிராக எம்முடன் சேர்ந்து குரல் எழுப்பிய அத்தனை பேரையும் நன்றியுடன் நான் நினைவு கூறுகின்றேன்.
நீதிச் சேவைக்குள் தகுதியானவ்ர்களே உள்வாங்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். நீதிச் சேவையின் சுயாதீனம் பேணப்படவேண்டும். நான் இன்று இருக்கலாம். நாளை இல்லாமல் போகலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த இரு வருடங்களில் பல்வேறு பாதிப்புக்கள் நீதிச் சேவையில் ஏற்பட்டிருக்கலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு சுயாதீனமான நீதிச் சேவையை கிடைப்பதை நாம் உறுடி செய்ய வேண்டும்.
அந்த வகையில் நீதிமன்ற சுயாதீனத்துக்காகவே இந்த இரு வருடங்கள் போராடிய நான் இன்னும் ஒன்பது வருடங்கள் என்னால் பதவியில் இருக்க முடியுமாக இருந்த போதிலும் ஓய்வுபெறுகின்றேன். இதனையும் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கருத்தில் கொண்டே நான் முன்னெடுக்கின்றேன்.
என்னை தொடர்ந்து புதிய நீதியரசராக நியமனம் பெற உள்ள கே. ஸ்ரீபவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.என குறிப்பிட்டார்.