மீண்டும் சிறீ லங்கா அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர் இலங்கை தமிழ் மக்கள். சிங்கள பௌத்த ஏகாதிபத்திய ஆட்சிக்குள் சிக்கி வாழும் எமது மக்கள் காலம் காலமாக தமது வாக்குகளை தமது அரசியல் தீர்வை முன்னிறுத்திய வாக்களித்து வந்திருக்கிறார்கள். இவற்றை சிறீ லங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாம் கண்கூடாக பார்க்கலாம்.
தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகள் தமிழர்களின் சுயாட்சியையே காலம் காலமாக வலியுறுத்தி வந்தார்கள்.
பிருத்தானியாவில் இருந்து Donomourgh யாப்புடன் திருப்பி வந்த sir பொன் ராமநாதன் – இலங்கை பாராளுமன்றத்தில் பேசும்போது Donomourgh யாப்புடன், அதன் அடிப்படையில் “tamils no more” தமிழர்கள் இலங்கை அரசியல் திட்டத்தில் இருக்க முடியாது என்றார்.
அதன் பின் உருவான அரசியல் கட்சிகள் சுயாட்சியை (Federal ) வலியுறுத்தியே தமிழ் மக்கள் இடையே அரசியலை நடாத்தி வந்தனர் என்பதை நம் அறிந்திருப்போம்.
இதன் அடிப்படையிலேயே தந்தை செல்வநாயகம் தனது பாராளுமன்ற பதவியை துறந்து மறு தேர்வுக்கு நின்று தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை நாம் அறிவோம்.
1976களில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று ‘தமிழ் ஈழமே” இறுதித் தீர்வு என்று – மேடை எங்கும் முழக்கம் செய்து – தமிழ் தலைவர்களுக்கு தமது ரத்தத்தால் திலகம் இட்டவர்களும் – அவர்களில் திலகம் இடப்பட்டவர்கள் இன்றும் சில தமிழ் அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
இவ்வாறு தமிழ் மக்களிடையே விடுதலை உணர்வை விதைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் எதிர்க் கட்சியாக நின்று பஜெரோவில் கொழும்பை வலம் வந்ததும் – தமிழ் மக்கள் இடையே – அதிலும் இளைஞர் இடையே விடுதலை என்ற கனவை அளித்துவிட்டு, அதன் பின் எவ்வாறு செயல் பட்டார்கள் என்றும் நாம் அறிவோம். இதே அரசியல் தலைவர்கள் அன்று ஆயுதம் எந்த வேண்டிய தேவைவரின் அதை செய்யும்படி மேடைகளில் பேசியதை நாம் மறந்து விட முடியாது.
ஆனால் சிறிலங்கா அரசியல்வாதிகள் தமது இனவாத அரசியலை எவ்வாறு நடாத்தினார்கள் என்பதும் எமக்கு தெரிந்ததுதான்.
இதே தமிழ் அரசியல் வாதிகள் என்ன காரணத்துக்காக சிறிலங்கா பாராளுமன்றத்துக்கு அனுபபப்;பட்டார்கள் என்பதை அவர்கள் தமது மனச் சாட்சியைத் தொட்டுக் கூறியாக வேண்டிய நேரம் இது.
2013 இல் வட மாகாண சபைத் தேர்தலின்போது இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பதை, அவர்கள் தமது மேடைப் பேச்சுக்களை மீண்டும் போட்டுக் கேட்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழ் மக்கள் 2009 இல் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் என்றால் அது அவர்களின் முகத்துக்காக அளித்த வாக்குகள் இல்லை என்பதை அவர்களே நன்கு அறிந்திருப்பார்கள்.
ஆயுதப் போராட்டம் சர்வதேச உதவியுடன் அழிக்கப்பட்ட நிலையில் ( இதில் ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் – ஆயுதப் போரை நடத்திய மகிந்த ராஜபச்கே என்றாலும் கூட – அதற்கு அடித்தளம் போட்டவர் ரணில் விக்ரமசிங்க – சந்திரிகா குமாரதுங்க கூட்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் 2003 இல் இடைக்காலத் தீர்வு ஒன்றை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் முன் வைத்தபோது – அதை பல சர்வதேச நாடுகள் வரவேற்று இருந்த நிலையில் – அதை சமாதானத்துக்கான முதல் படியாக ஏற்றுக்கொள்ளாமல் – சர்வதேசத்தில் சில நாடுகளின் உதவிகளுடன் இராணுவ போருக்கான அடித்தளத்தை இட்டவர் இவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.)
இன்றைய நிலையை நாம் எடுத்து பாப்போம் என்றால் 1948 இல் இலங்கையை ஆண்ட பிரதம மந்திரியில் இருந்து 1972 இல் இருந்து சிறிலங்காவை ஆண்ட பிரதம மந்திரி – சனாதிபதி வரை பாப்போம் என்றால், எல்லோரும் தமிழ் மக்களின் உரிமைகளை அழிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதில் ஜெ ஆர் ஜெயவர்த்தன தமிழ் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடையை விதித்திருந்தாலும் கூட சந்திரிகாவின் ஆட்சியில் தான் அதுமிகவும் கடுமை ஆக்கப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேர்தல் நடக்க ஒரு வாரத்திற்கு முன் எந்தவித விவாதத்திற்கும் இடம் அளிக்க நேரத்தை ஒதுக்காமல் – தாங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழர்கள் தம்மை அழித்தவனுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு – அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டார்களே ஒழிய – அவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று இல்லை. ஜனநாயகம் பேசுபவர்கள் தமது கட்சிக்குள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களிடையே ஒரு விவாதத்தை உருவாக்கி இருந்தால் – தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது வேறு பட்ட கருத்தை கூற வேண்டிய சந்தர்பமே வந்திருக்காது- ஆனந்தி – ஸ்ரீஹரன் – மறவன்புல சட்சிதானந்தன் போன்றார் தமது கருத்துக்களை வெளியிட்டதற்கான காரணம் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை துவமே ஒழிய வேறு யாரும் அல்ல – ஆகவே 80,000 தமிழ் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஆனந்தியை கட்சியில் இருந்து இடைநிறுத்துவது ஜனநாயகம் அல்ல.
சர்வதேசத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் பல விதமான அறிக்கைகள் தேர்தலை ஒட்டி வெளியிட்டன- அந்த அறிக்கைகளில் ஸ்ரீ லங்கா அரசு இதுவரை காலமும் எவ்வாறு தமிழர்களின் உரிமைகளை பறித்தார்கள், தமிழ் இன அழிவுக்கு வழி வகுத்தார்கள் என்பதையும், நாம் மிகவும் கவனாமாக சிந்தித்து செயல் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டது, காரணம் தமிழ் மக்களுக்கு நாம் அடிப்படை விடயங்களை சொல்லியாக வேண்டிய அவசியம் எல்லோருக்கும் இருக்கிறது.
புலம் பெயர் மக்கள் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்வது அர்த்தம் அற்றது, நாமும் எமது நாட்டில் எமது உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படை விருப்பு உள்ளவர்கள் தான், நாமும் எந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வந்து மிகவும் கஷ்டமான சூழலில் உறவுகளை விட்டு வாழ்கிறோம். ஆகவே தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தீர்வு வேண்டும் – நாம் எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று சிந்தனையில் எமது போராட்டத்தை புலம் பெயர் மண்ணில் எமது மக்களால் சொல்ல முடியாததை சர்வதேசதிக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
மக்களிடம் உண்மை நிலையைச் சொல்ல வேண்டும் என்பது தான் அடிப்படை சிந்தனை – வெறும் கனவுகளை அள்ளி வீசி பாராளுமன்ற உறுப்பினராகவோ – மந்திரிகள் ஆகும் நோக்கம் எமக்கு இல்லை என்பதைவிடுத்து மக்களிடம் உண்மை நிலையைச் சொல்லும் சிந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைத்துவத்துக்கு இருக்கவேண்டும்.
மக்களிடம் சென்று அவர்கள் எவ்வாறு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நடை முறைப்படுத்தப் போகிறார்கள் என்பதே இன்றைய நிலை. – உண்மையை மக்களிடம் பேசவேண்டியது இவர்களின் கடமை. பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
-தாயகத்தில் இருந்து ஓசை இனியன்-