
அழகு ராணிப் போட்டியில் பங்கேற்றவர்களில் அழகு ராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர் என்று கூறுவதே பொருத்தம்.
இத்தகைய திருத்தங்கள் பலவருடங்களின் பின் வரலாம். சிலவேளை வராமலும் போகலாம்.
ஆனால் உலக அழகு ராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர்தான் உலகின் முதலாவது அழகு ராணி என்று முடிவு செய்து விடக்கூடாது.
எத்தனையோ அழகு ராணிகள் ஊர்களிலும் கிராமங்களிலும் இருக்கலாம், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கலாம், சிலவேளை போட்டியில் பங்குபற்ற விரும்பாமல் தவிர்த்திருக்கலாம்.
எனினும் இது பற்றியெல்லாம் யாரும் கவனிப்பதோ, கவலை கொள்வதோ இல்லை.
இப்படி நிறைய விடயங்கள் இவ் உலகில் நடந்துகொண்டு இருக்கின்றன. இதில் ஒன்றைத்தான் நாம் இங்கு பிரஸ்தாபிக்கின்றோம்.
காகம் நிறத்தாலும் கத்தும் ராகத்தாலும் பலருக்கு விருப்பமில்லாத ஒரு பறவை. கருமை நிறமும் காக்கா … காக்கா … என்ற கரகரத்த குரலும் அதற்கு சாதகமாக இல்லாததால், நாம் அதனை ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால்,கிடைத்த உணவை தன் உறவுகளை அழைத்து பகுத்துண்பதும், ஒரு காகம் இறந்து விட்டால் ஏனைய காகங்கள கூடிக் கத்தி அழுது உறவின் பிரிவை நினைந்து கொள்வதும் மாலைப் பொழுதுகளில் நீராடி உறங்கச் செல்வதும் அதிகாலை பொழுதின் விடியலை அறிவிப்பதிலும் காகத்திற்கு நிகராக எந்தப் பறவையும் கிடையாது.
இவை மட்டுமல்ல; பாட்டிற்கு இதுவென்று இந்த உலகம் போற்றுகின்ற குயிலின் பிறப்பிடம் காகத்தின் கூடு என்பதை நாம் மறந்து விட்டது தான் மிகப்பெரும் தவறு.
ஆம், குயில்கள் கூடுகட்டுவது கிடையாது. அவற்றால் கூடுகட்டவும் முடியாது. காகங்கள் கட்டுகின்ற கூடுகளுக்குள் தான் குயில்கள் முட்டையிடும். அந்த முட்டைகளை அடைகாத்து குஞ்சாக்கி இரை கொடுத்து வளர்த்து விடுகின்ற மிகப்பெரும் பணியை காகங்களே செய்கின்றன.
இருந்தும் அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்வதும் இல்லை. நினைத்துப் பார்ப்பதும் கிடையாது.
உண்மையில் காகங்களின் அடைகாப்பும் குயில்களின் இனிய கூவலுக்கு உதவுகின்றது.
இருந்தும் குயில்களின் இனிய கூவல் பெறுமதி பெற்று விடுகிறது. காகத்தின் பணி மறக்கப்படுகின்றது.
இந்நிலையில் தான் தமிழர்களும் அவர்களின் அரசியல் தலைமையும் உள்ளன.
எவ்வளவோ கஷ்டப்பட்டு காகங்கள் கூடு கட்ட அதற்குள் முட்டையிட்டு விட்டு, குஞ்சு பொரிப்பது; இரை கொடுப்பது என எல்லாக் கடமைகளையும் காகங்களின் தலையில் பொறுப்பித்து உல்லாசமாய் கூவித்திரிகின்ற குயில்கள் தான் எங்கள் அரசியல் தலைமை.
தமிழ் மக்கள் கஷ்டப்பட்டு உண்ணா நோன் பிருந்து தொடர் போராட்டம் நடத்தி தங்கள் நிலங்களை மீட்டெடுப்பர். அவர்களின் போராட்டம் வெற்றிபெற உள்ளது என்ற செய்தி அறிந்ததும் தமிழ் அரசியல் தலைமை போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும்; அரசதரப்பை சந்திக்கும்; அறிக்கை விடும். நாங்கள் கதைத் துத் தான் நிலம் விடுவிக்கப்பட்டது என கூவிக் கொள்ளும்.
என்ன செய்வது? குயில்களின் தலைவிதி இப்படி. காகத்தின் தலைவிதி அப்படி அனுபவிப்பதை தவிர வேறுவழி ஏதும் இல்லை; அவ்வளவு தான்.
(வலம்புரி ஆசிரியர் தலையங்கம்)