சிறீலங்கா மத்திய மாகாணத்தில் ‘இன்புளுவென்ஸா’ ஏஎச்-1 என்1 வைரஸ் நோயினால் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 115 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ஷிராணி சமரசிங்க தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணித் தாய் உட்பட 12 பேரும் மாத்தளை மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணித் தாய் உட்பட ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாகவும் மாத்தளை மாவட்டத்தில் 73 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 40 நோயாளிகளும், நுவரெலியா மாவட்டத்தில் இரு நோயாளர்களும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவகை வைரஸ் மூலம் பரவும் இந்நோய் சுகதேகியான ஒருவருக்கு ஏற்பட்டால் சாதாரணமாக குணமாகி விடும் என்றும், நீரிழிவு, சிறுநீரக வியாதி போன்ற நீண்டநாள் வியாதிகளினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டால் நிலைமை மோசமடையும் என்றும் அது மரணத்தில்போய் முடிவடையும் அபாயம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். உயிரிழந்துள்ள அனைவரும் அவ்வாறு ஏதோ ஒரு நீண்ட நாள் நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
சாதாரண இருமலே இந் நோயின் முக்கிய அறிகுறி என்று தெரிவித்த அவர் இருமல் யாருக்கேனும் ஏற்பட்டால் மற்றவர்களுக்கு அது தொற்றாமல் பாதுகாப்பாக இருப்பதுடன், உடன் வைத்தியர் ஒருவரிடம் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நோய் ஆரம்பத்தில் இனங்காணப்பட்டால் அதனை சுகப்படுத்துவது இலகுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.