தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினரால் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் 13 ஆம் தேதி துவங்கிய போராட்டம் முடிந்தபாடில்லை. இதில், வங்கிக்கடன் ரத்து, கூடுதல் வறட்சி நிவாரணநிதி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலறும் ஆதரவளித்து வருகின்றனர்.
இவர்களை இன்று மூன்றாவது முறையாக தமிழக அரசு சார்பில் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை சந்தித்தார். தமிழக விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டியவர், இதற்காக தமிழக அரசு அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நதிகள் இணைப்பு அனைத்து விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கும் எனவும் தம்பிதுரை கருத்து கூறினார். இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறும் கேட்டுக் கொண்டார். இதற்கு மறுத்த விவசாயிகள் தம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியில் இருந்து திரும்பப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தனர். இதுபோல், தம்பிதுரை நேரில் வந்து தமிழகவிவசாயிகளிடம் வலியுறுத்துவதும், அதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவிப்பதும் மூன்றாவது முறை ஆகும்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் 500 விவசாயிகள் ஜந்தர் மந்தர் வந்து தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பாரதிய கிசான் யுனியன் சார்பில் அதன் தலைவர் பல்பீர் சிங் ரஜேவால் தலைமையில் வந்திருந்தனர். தமிழக விவசாயிகளுடன் நாள் முழுவதும் அமர்வதற்காக வந்தவர்கள் தங்கள் கழுத்துகளில் கயிற்றை மாட்டி தூக்கிலிட்டுக் கொள்வது போல் போராட்டம் நடத்தினர். இவர்கள், இந்தியிலும் தமிழக விவசாயிகள் தமிழிலும் ஜந்தர் மந்தரில் இருமொழிகளிலும் கோஷங்கள் மாறி, மாறி ஒலித்தனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ‘பிரதமர் நரேந்தர மோடி எங்களை அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லை. எங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளுடன் அன்றி டெல்லியின் அண்டை மாநில விவசாயிகளிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. எனவே, எவ்வளவு கடுமையான வெயிலும் நம் போராட்டம் தளராது.’ எனத் தெரிவித்தார்