யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமுக்கு விஜயம் மேற்கொண்டார். அகதி முகாமில் உள்ள மக்கள் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என நம்புவதாக கூறினார்.
முதலில் அந்த முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு பிரிட்டன் அமைச்சர் காலணிகளை வழங்கினார். வலி.வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களின் வரைபடத்தையும் பார்வையிட்டார்.
அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –நீங்கள் சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்திருக்கவில்லை. என்பதனை உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெரிகின்றது. டேவிட் கமரூன் இங்கே வருகை தந்திருந்தார். அவருக்குப் பின்னர் நானும் வந்திருக்கிறேன். அது என்னுடைய விருப்பமும் கூட, இலங்கையில் அண்மையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன.
இந்த மாற்றங்களோடு மாற்றமாக நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்குச் செல்லவேண்டும் என கூறிய அவர் பாடசாலை சிறுவர்களை பார்த்து நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்குச் செல்லும்போது இந்த காலணிகளை அணிந்து கொண்டு செல்லுங்கள் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.