மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் பாரிய களப்பயிற்சி ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.
நேற்று ஆரம்பமான இப்பயிற்சி நடவடிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருதித்துறை நகருக்குள் திடீரென 70 க்கும் அதிகமான விதவிதமான இராணுவத்தின் வாகன அணி பிரவேசித்தமையினால் அங்குள்ள மக்கள் சிறிது பதற்றமடைந்துள்ளனர்.
மேலும் வெள்ளை நிறப் பூச்சுகளுடன் ஐ.நா. அடையாளம் பொறிக்கப்பட்ட கொடியுடன் 68 வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரையோர வீதியின் ஊடாகச் சென்றதை அடுத்து பொதுப்போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டிருந்தது.
மாலியில் உள்ள களநிலைச் சவால்களை எதிர்கொள்வது தொடர்பான தயார்படுத்தல்களை மேற்கொள்ளவே இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்ட போதிலும் இவ்வாகன தொடரணி சென்ற விதத்தை பார்த்த மக்கள் கடந்த கால யுத்த நிலைமையை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.