பறிக்கப்பட்ட பதவிகளையும் குடியுரிமையையும் மீளவும் பெற்ற பொன்சேகா!

0
509


sarath-fonsekaமுன்னாள் இராணுவத் தளபதியும், முப்படைகளின் பிரதானியுமான  சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சிறப்புரிமைகளும் அவருக்கு மீள வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னாள் அரசாங்கத்தினால் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டதுடன் அவருடைய ஓய்வூதியமும் இடைநிறுத்தப் பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவுக்கு முழுமையான மன்னிப்பு வழங்கியிருந்தார். இதற்கமைய அவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதுடன், பறிக்கப்பட்ட அனைத்து பதக்கங்கள் மற்றும் பதவிகளைப் பெறுவதற்கு அவருக்கு பூரண உரிமை வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி, பதக்கங்கள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து வரப்பிரசாதங்களும் மீளவழங்கப்பட்டிருப்ப தாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் கே.ஜே. ஜயவீர தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா ரணவிக்ரம பதக்கம், ரணசூர பதக்கம், விசேட சேவை விபூஷண, உத்தமசேவா பதக்கம் ஆகிய நான்கு பதக்கங்களை மீள அணியமுடியும். அவருடைய சேவைக்காலத்தில் வழங்கப்பட்ட ஏனைய பதக்கங்களையும் அவர் மீள அணிய முடியும் என இராணுவம் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான மன்னிப்பு வழங்கியிருப்பதால் அவருக்கு மறுக்கப்பட்ட வாக்குரிமை மீள வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப் போவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here