கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு சிறீலங்கா இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
29வது நாளாக தீர்வின்றி தொடரும் நிலையில் தாம் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுள்ளதகவும் ஒருவாரகால அவகாசம் அனைத்து தரப்பினருக்கும் வழங்கியிருப்பதாகவும் அந்தநாள்வரை பொறுமையுடன் வீதியில் காத்திருப்பதாகவும் தெரிவித்த மக்கள் நாம் அரசாங்கத்தின் சொத்தை கேட்கவில்லை எனவும் ஆண்டாண்டுகாலம் வாழ்ந்த சொந்த தாய் நிலத்தையே கோரி நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர். அத்தோடு சொந்த தாயை பறித்து வைத்துக்கொண்டு இன்னொருத்தியை இவர்தான் உனது அம்மா எனக்கூறுவது போன்றதுதான் தாம் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ள கேப்பாபுலவு என்னும் போர்வையில் கேப்பாபுலவு மாதிரிகிராம வாழ்க்கை எனவும் தெரிவித்தனர்.
அத்தோடு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு எவ்வாறான வழிகளிலெல்லாம் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு கிடைத்ததோ அவ்வாறே கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களான தமக்கும் அனைவரையும் திரண்டுவந்து ஆதரவு அளிக்குமாறும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். நிலம் மீட்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள மக்கள் சொந்த மண்ணில் கால் பதித்த பின்பே தமது அவல வாழ்வு முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாபுலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள் பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி 480 ஏக்கருக்கு மேலான மக்களின் நிலங்களில் 10க்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளதோடு பாரிய உணவு விடுதிகளையும் உல்லாச பொழுதுபோக்கு தளங்களையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.