வட்டுவாகல் – மக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என்கிறது சிறீலங்கா !

0
164


முல்லைத்தீவு பரந்தன் பிரதானவீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையாக அமைந்துள்ள சிறீலங்கா கடற்படையின் கோத்தபாய கடற்படை தளம் அமைந்துள்ள பிரதேசம் மக்களுக்கு பாவனையற்ற பிரதேசமாக எச்சரிக்கை பெயர் பலகைகள் கடந்த சனிக்கிழமை(25) முதல் நிறுவபட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல் பாலம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமம் வரை உள்ள தமக்கு சொந்தமான 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்து பாரிய கடற்படை தளத்தை சிறீலங்கா கடற்படையினர் நிறுவியுள்ளதாகவும் தாம் தமது சொந்த நிலங்களை இழந்து அகதி வாழ்க்கை வாழ்வதாகவும் குறித்த கடற்படைமுகாம் அமைந்துள்ள காணிகளுக்கு சொந்தமான மக்கள் தொடர்சியாக குற்றஞ்சாட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மக்களுக்கு சொந்தமான காணிகளை சிறீலங்கா கடற்படையினர் மக்களுக்கு பாவனையற்ற பாதுகாப்பற்ற பகுதியாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் நிரந்தரமான பாதுகாப்பு காவலரண்களை நிறுவிவருவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தமக்கு சொந்தமான தற்போது முகாம் அமைந்திருக்கும் காணிகளைசிறீலங்கா கடற்படைக்கு வழங்குமாறும் மாற்றீடாக வேறு காணிகளை தருவதாகவும் அண்மையில் உயர் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியபோதும் அதற்க்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர் .
இதற்க்கு பின்னரே மக்களின் காணிகளில் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் பலகைகளை சிறீலங்கா கடற்படை நிறுவியதாகவும் தம்மை தமது நிலங்களுக்குள் நுழைய விடாது தடுக்கும் நோக்குடன் எச்சரிக்கும் விதமாகவே இந்த அறிவித்தல் பலகைகள் இடப்பட்டுள்ளதாகவும் வட்டுவாகல் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இறுதி யுத்தத்துக்கு பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து குறித்த கடற்படைத்தளம் மக்களின் காணிகளில் பாரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதோடு படைத்தத்தளம் அமைந்துள்ள மக்களின் காணிகளில் சிறீலங்கா கடற்படையினர் மரக்கறி தோட்டம் அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here