வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா நாளை மாலை 15.00 மணியளவில் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு கல்லறை அமைந்துள்ள பிரதேசமான ஒட்டுசுட்டான் கற்சிலைமடு சிலையடி பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் நிதியொதுக்கீட்டில் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தால் குறித்த திருவுருவசிலையானது அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராசா பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.
இந்தவிழாவில் பாரம்பரிய கலை பண்பாட்டு வீதிப்பேரணி, பண்டாரவன்னியனின் வீரக்கொடியேற்றல் மற்றும் திருவுருவச்சிலை திறந்து வைத்தல், கல்வெட்டு திரைநீக்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் பற்றிய வரலாற்று நூல்களை எழுதிய மறைந்த கலைஞர் அமரர் முல்லைமணி அவர்களுக்கான நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
குறித்த சிலை அமைக்கப்படும் பிரதேசத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் சமாதி ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டு அதில் பண்டாரவன்னியனின் இறப்பு பற்றிய பதிவும் இடப்பட்டிருந்தது. இறுதி யுத்தம் இடம்பெற்ற 2009க்கு பின்னர் குறித்த சமாதி உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.