போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மௌனமாக இருப்பது ஏன் !

0
107


வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும் இல்லாமல் மைத்திரி அரசு இருப்பதால், மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
எனவே, அது தொடர்பில் உறுதியான கருத்தை அரச தலைவர் வெளிப்படுத்த வேண்டும்” என, கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
இக் கடிதம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியில் இடம் பெற்று வரும் போராட்டங்களுக்கு நான் சென்றிருக்கின்றேன்.
அங்கு நீண்ட நாட்களாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து, வருகின்ற போதும் இங்கு எதுவுமே நடக்காதது போன்றும் அது தொடர்பில் கரிசனை ஏதுமற்ற நிலையிலையே அரச தலைவர் உள்ளிட்ட அரசு சம்மந்தப்பட்டோர் இருந்து வருவதால் மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
ஆகவே, இந்த விடயத்தில் அரச தலைவர் உறுதியான கருத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனை அரச தலைவரோ அல்லது வேறு யாராகவோ அது அமைச்சர்களாகவோ இருந்தாலும் யாரின் ஊடாகவேனும் அத்தகைய கருத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இதனை வெளிப்படுத்துமாறு கோரியே அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றேன்.
இந்த நிலையில், நான் கொழும்பிற்கு செல்ல வேண்டியிருப்பதால் அங்கு அரச தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடவும் எண்ணியுள்ளேன். அதன் போதும் வட-க்கு மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்கள் மற்றும் மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறவுள்ளேன்” என, முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here