தமது பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் – முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது . சிறீலங்கா கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறீலங்கா கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு, தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வியாழக்கிழமை (23) காலை ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், அமைதியான முறையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்,தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை, நேரடியாகச் சென்று சந்தித்து வருகின்றனர்.
கடற்படையினர் எவ்வாறான அச்சரூத்தல்களைத் தமக்குக் கொடுத்தாலும் தாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும், நிலம் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்தனர்.