துருக்கி மற்றும் சில மத்திய கிழக்கு , வட அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா செல்லும் விமானங்களில் மடிக்கணனிகளை பயணிகள், தங்களுடன் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கான தடை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கையடக்க தொலைபேசிகளை விட பெரிய அளவில் இருந்தால் அவற்றைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஏனெனில், அவற்றில் வெடிபொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா விதித்த தடை, எட்டு நாடுகளுக்குப் பொருந்தும். பிரித்தானிய , ஆறு நாடுகளின் பயணிகளுக்கு அத்தகைய தடையை விதித்துள்ளது. துருக்கி, மொராக்கோ, ஜோர்டன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய எட்டு நாடுகளுக்கு ஒன்பது விமான சேவை நிறுவனங்கள் தினந்தோறும் 50 விமானங்களை இயக்குகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனமான எமிரேட்ஸ், பயணிகள் தங்கள் மின்னணு சாதனங்களை விமானத்தில் ஏறும் வரை பயன்படுத்தும் வகையில் வசதியை அளிக்கின்றன.
மேலும், வேறு நாடுகளில் இருந்து இரண்டு கட்டங்களாக, துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் பயணிக்கும் பயணிகள், முதல் கட்ட விமான பயணத்தில் தங்கள் மடிக்கணனிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .