கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் போராட்டம் 24 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது

0
118


கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று (24) 24 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.
கேப்பாப்புலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு சிறீலங்கா இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் நிலங்களை விடுவிக்க கோரி இந்த போராட்டம் இரவுபகலாக தொடர்கின்றது.
இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட கேப்பாப்புலவு கிராமத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 24 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இரண்டு நாட்களில் உரிய முடிவு கிடைக்கும் என கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். ஆனால் இன்றோ மூன்று நாட்கள் கடந்துள்ள போதிலும் எவரும் எந்த பதிலையும் தமக்கு வழங்கவில்லை என கவலை தெரிவித்தனர்.
இரண்டு நாட்களில் நல்ல பதில் கிடைக்கும் என்ற ஆவலோடு காத்திருந்த எமக்கு ஏமாற்றம் மட்டும்தான் கிடைத்ததாகவும், ஆகவே இனிவரும் நாட்களில் வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு இத்தனை நாட்களாக வீதியில் போராட்டத்தை மேற்கொண்டு வருவதானால் பலருக்கு சுகயீனம் உள்ளட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இனியும் இவ்வாறு வீதியில் கிடந்து நோயாளர்களாக ஆக தம்மால் முடியாது என்றும் எனவே, இந்த அரசு விரைந்து தமக்கான தீர்வினை தர முன்வர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாபுலவு பூர்வீக கிராமம் ,சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு , சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில், இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here