சிறிலங்காவில் இன்று புதிய ஆட்சி மலர்ந்துள்ள போதும் தமிழர்களுக்கு எதுவும் மலர்ந்ததாகத் தெரி யவில்லை. தாயகத்தில் மகிந்த அரசின் கைக்கூலி இராணுவத்தினரும் அதன் சார்பானவர்களும் அப் பாவிகள் மீது இன்னும் தமது கையாலாகத் தனத்தைக் காட்டிவருகின்றனர். மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியாச்சு இனி எமக்கு விடிவு காலம் தான் என்று நப்பாசை கொண்டவர்களுக்கு தற்போது பேரிடியாகத் தாயகத்தில் நடக்கும் சம்பவங்கள் இருக்கின்றன.
இதனை நிருபிப்பதாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று அமைந்துள்ளது. அதாவது, வடமராட்சியில் இராணுவத்தினரின் தாக்கு தலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இளம் குடும் பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார.;
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவேளை இராணுவ முகாமிற்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்றவரை இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கி யதாக வல்வெட்டித்துறை காவல்துறை நிலையத்தில் குறித்த இளைஞர் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளை யாட்டு மைதானத்தில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த வேளையே அருகில் உள்ள இராணுவ முகாமிற்குள் பந்துசென்றுள்ளது.
அதனை எடுப்பதற்கு சென்ற இளைஞன் இராணுவத் தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை எள்ளங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன் என்பவரே இந்த நிலைக்கு ஆளானார்.
இராணுவத்தினர் தாக்கியவேளை குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
எனினும் குறித்த இளைஞன் தனது உந்துருளியை மைதானத்தில் விட்டுச் சென்றுள்ளார். அதனை இராணு வத்தினர் தங்களது முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னர் உந்துருளியை முகாமிற்கு வந்து எடுத்துச் செல்லுமாறு அவருடைய வீட்டுக்கு சென்ற இராணு வத்தினர் கூறியுள்ளனர்.
அதன்போது தனது தாய் , சகோதரியுடன் இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் முகாமில் வைத்து மீண்டும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் மற்றும் காதுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையிலேயே வல்வெட்டித்துறை காவல்துறை நிலையத்தில் தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.
தற்போது ஊறணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அறிந்து, தாக்குதலை நடத்திய இராணுவத்தினர் ஊறணி வைத்தியசாலைக்குச் சென்று காவல்துறை முறைப் பாட்டை வாபஸ்பெற்றுக்கொள்ளுமாறும் மீறினால் கொலைசெய்யப்படுவாய் எனவும் ஜெகனை மிரட்டி யுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் முகப்புப் பகுதியில் மீண்டும் ‘இராணுவக் குடியிருப்பு’ என அடையாளப்படுத்தும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளமை கண்டு வலி,வடக்கு மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளா கியுள்ளனர்.
தமக்கு ஒரு விடிவு வரும் என்று நம்பி வாக்குகளை வாரிவழங்கி 2 வாரங்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பில் இடிவிழுந்துள்ளது போன்று இச்செயல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெயர்ப் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதுதொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப் பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு அமைக்கப்பட்டு அதன்மேல் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆட்சியினைக் கைப்பற்றியிருக்கும் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசு வடமாகாணத்தில் படையினரினால் கையகப்படுத்தப் பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருக்கும் நிலையில், வலி.வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பும் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் புதிய அரசு மீள்குடியேற்றம் தொடர்பிலான முழுமையான தகவல்களைத் தமக்குத் தருமாறு கோரி யதற்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேகரித்துவரும் மீள்குடியேற்றம் தொடர்பிலான தகவல் சேகரிக்கும் நடவடிக்கைக்கும், மக்கள் ஆர்வத்துடன் தங்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக தென்பகுதி மக்களுடன் தமிழ் மக்களும் பெருவாரியாக வாக்களித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தை ஆட்சிப்பீடம் ஏற்றிய போதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவந்த கெடுபிடிகள் தொடர்ந்தும் அவ்வாறே எந்தவித மாற்றமும் இன்றித் தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீள்குடியேற்றப் பிரச்சினையில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் நுழைவாயில் பிரமாண் டமான வளைவு அமைக்கப்பட்டு அதன்மேல் இராணுவக் குடியிருப்பு என்ற பெயர்ப் பலகை பொறிக்கப் பட்டிருந்தமையால் குறித்த பகுதி விடுவிக்கப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதேவேளை, சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜ பக்சவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடு களும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்த தாகத் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப் பங்களும் தொடர்கின்றன. இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கை யின்மையும் ஏற்பட்டுவருகின்றது.
இதேவேளையில் பயங்கரவாத தடுப்புப்பிரிவால் முன்னைய நாள் போராளிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாக் கப்பட்டு வருகின்றனர்.
நான் இந்த முன்பள்ளி நிகழ்விற்கு வந்தபோது நிறைந்த இராணுவ பிரசன்னத்தை இங்கு பார்த்தேன். அது மனதிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஒரு முன்பள்ளி நிகழ்வில் இராணுவச்சீருடை பிரசன்னம் எமது மக்களையும் எமது எதிர்கால சந்ததிகளையும் ஓர் அடிமைத்தனத்துக்குள் வைத்திருப் பதையே ஆக்கிரமிப்பாளர்கள் விரும்புவதான தோற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த இராணுவ பிரசன்னம், எமது பிள்ளைகளின் உளவியலில் பாதிப்பை ஏற்படுத்தும். சிங்கள கிராமங்களில் இப்படி இராணுவச்சீருடையுடன் இராணுவத்தின் கொடிகளையும் ஏற்றி விழாக்கள் நடக்குமா. ஒருபோதும் நடக்காது. ஆனால் நாம் தமிழர்கள் என்ற காரணத்தால் நாம் அடிமைகள் என்ற காரணத்தால் இராணுவத்தினர் இத்தகைய கீழ்த்தரமான வேலைகளை செய்துவரு கின்றனர்.
இந்த நாட்டினுடைய ஜனாதிபதி நல்லாட்சியை ஏற்படுத்துவதாக சொல்கிறார் – முயற்சிக்கிறார்.
ஆனால், இங்கு இராணுவமோ பழைய மாதிரியே செயற்பட நினைக்கின்றது. எனவே இதுதொடர்பாக நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த இருக்கின்றேன்.
எமது பிள்ளைகளின் கல்லறைகளின் மீது இராணுவம் ஏறிமிதித்து அசிங்கம் செய்யும் வரை இராணுவம் எமக்கு நண்பர்களாக முடியாது. நாம் கடந்த எட்டாம் திகதி தெளிவாக வாக்களித்து மைத்திரிபாலசிறிசேனா அவர்களை ஜனாதிபதி ஆக்கியது, தொடர்ந்தும் நாம் அடிமை வாழ்வு வாழ்வதற்கு அல்ல.
எனவே இந்தச்செய்தி இராணுவ மற்றும் அரசாங்க மேலிடங்களுக்கு சென்று சேரவேண்டும் எனவும் சிறிதரன் வன்னியில் அண்மையில் இடம்பெற்ற முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டபோது உணர்ச்சி பொங்கத் தெரிவித்திருந்தார்.
இது அவர் கண்முன்னே நாளும் நிகழ்வுகளைக் கண்டு, அவருடைய உள்ளக் கிடக்கையில் இருந்து வெளிவந்த வார்த்தைகள். அவர் குறித்த நிகழ்வில் இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தார்.
“என்னடா இது முன்பள்ளி நிகழ்விற்கு வந்து இப்படி உரையாற்றி எங்கள் வேலைக்கு உலைவைக்கப் போகிறீர்கள்…” என்று நினைக்கலாம். “முன்பள்ளியில் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும்போது, நான் இப்படிக் கதைப்பது தப்பல்ல. சில விடயங்களை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லவேண்டும்” என்றும் சிறிதரன் கூறியிருந்தார்.
ஆம் அவர் கூறியது போல நிச்சயமாக நாம் நிதமும் இராணுவ வன்கொடுமைகளைக் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருந்தால் அவர்களின் கை மேலோங்கிக் கொண்டுதான் இருக்கும். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத்தான் வேண்டும்.
சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
– நன்றி : ஈழநாடு (28.01.2015)