ஜெனிவா மனித உரிமை பேரவையில் நான் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது மன்னாரில் உள்ள எனது அலுவலகத்தை திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள் ளனர். இதுதான் இலங்கையின் தற்போதைய நிலைமை என்று மன்னார் சிவில் சமூக குழுவின் தலைவர் பாதிரியார் செபமாலை அடிகளார் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமை வளாகத்தில் இடம்பெற்ற உப குழுக்கூட்ட மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெனிவாவில் உரையாற்றி வருகின்றேன். அந்த மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அதன்மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முயற்சிக்கிறோம். ஆனால் நாங்கள் இவ்வாறு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முயற்சிக்கும் போது மன்னாரில் உள்ள எனது அலுவலகம் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
இதுதான் இலங்கையின் தற்போதைய நிலைமை. கருத்து சுதந்திரம் உள்ளதாக கூறப்பட்டாலும் எமக்கு கருத்து சுதந்திரம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என்றார்.