ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமெனக் கோரி அண்மையில் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை நேற்று ஐக்கிய நா டுகள் மனித உரிமை பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் அதில் கலந்துகொண்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்தப் பிரேரணையை ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப் பித்தனர்.
அந்தப் பிரேரணையின் பிரதியொன்று ஐக்கியநாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியம் கட்டோஸுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- சிறீலங்காஅரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். விசேடமாக பொறுப்புக்கூறல் பொறி முறை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, நல்லிணக்கம் என்பன முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் மக்களின் காணிகள் மீள்வழங்கப் பட வேண்டும்.
மோதல்கள் மீள்நிகழாமை உறுதிப்படுத்தவேண்டும் மற்றும் நட்டஈட்டுக்கான அலுவலகம் அமைக்கப்படவேண்டும். அத்துடன் அரசாங்கம் நம்பகரமான நீதிப்பொறிமுறைக்கு இதுவரை அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
சர்வதேச சமூகத்திற்கும் ஐ.நாவிற்கும் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளபோதிலும் அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கம் தன்னுடைய வாக்குறுதிகளையே நிறை வேற்ற நடவடிக்கை எடுக்காததால் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை சர்வதேச நீதிப் பொ றிமுறை செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் உண்மை, நீதி, சமமான அரசியல் தீர்வு என்பன இல்லாமல் நல்லிணக்கமோ, நிரந்தர மான சமாதானமோ, இலங்கையில் சாத்தியமில்லை என்பதை எமது மாகாணசபை வலியுறுத்துகிறது. எனவே சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை அரசாங்கம் இணங்குவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையும் சர்வதேச சமூகமும் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.