ஸ்பெயினில் நேட்டோ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியாகினர், 21 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்பகாட்டில் இருக்கும் லாஸ் லாவோஸ் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் நேட்டோ பயிற்சியில் திங்கட்கிழமை ஈடுபட்டிருந்தன. பிற்பகல் 3.20 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்ட எப்-16 போர் விமானம் டேக் ஆப் ஆனது.
ஆனால் சிறிது நிமிடத்தில் விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அது விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பிற விமானங்கள் மீது மோதி தரையில் விழுந்தது. இந்த விபத்தில் பிரான்ஸைச் சேர்ந்த 8 பேர், 2 கிரேக்கர்கள் என 10 பேர் பலியாகினர். மேலும் பிரான்ஸைச் சேர்ந்த 10 பேர், 11 இத்தாலியர்கள் காயம் அடைந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 2 விமானிகள், அது விழுந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பிற விமானிகள் மற்றும் மெக்கானிக்குகள் பலியானவர்களில் அடக்கம். காயம் அடைந்தவர்களில் 5 பேர் லா பாஸில் உள்ள மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்கள் அல்பகாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த விபத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த சம்பவம் மொத்த நேட்டோ குடும்பத்தையே பாதித்துள்ளது.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.