இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் நொதர்ன் பவர் நிறுவனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாசுபாடுகள் தொடர்பில் சுதந்திர ஆணைக்குழுவினை அமைத்து அதனூடாக தகுதி வாய்ந்த நிறுவனங்களின் உதவியுடன் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைகளை விரைந்து மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2009 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் குறித்த பிரதேசத்தில் கழிவு எண்ணை ஆபத்து காணப்படுகின்ற போதும் இது தொடர்பாக அரச திணைக்களங்கள் பலவற்றின் உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் கழிவு எண்ணெய் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக பார்வையிட்டு அங்கே எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டு அது தொடர்பான விபரங்களை உடனடியாக மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு தெல்லிப்பழை, உடுவில் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும்,பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு மருத்துவ ரீதியிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.