பேருந்துக் கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 8 தொடக்கம் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 8 முதல் 10 வீதத்தினால் குறைக்கப்படுவதாக உள்ளக போக்குவரத்து அமைச்சு நேற்று அறிவித்தது. இதன் படி ஆரம்ப கட்டணமான 9 ரூபா 8 ரூபாவாகவும் 13 ரூபா கட்டணம் 12 ரூபாவாகவும் குறைவடையும்.
அதேவேளை, 17 ரூபா 20 ரூபா மற்றும் 24 ரூபா கட்டணங்கள் தலா 2 ரூபாவினால் குறைவதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ரயில் கட்டணங்களில் மாற்றம் ஏற்படாது என்று குறிப்பிட்ட அமைச்சர், நெடுஞ்சாலை சொகுசு பஸ் கட்டணங்கள் தொடர்பில் தனியான ஒழுங்குமுறையொன்றை அறிமுகம் செய்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கட்டண குறைப்பு தொடர்பான விபரப்பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பத்திரிகைககளில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை குறைப்புடன் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவது குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று உள்ளக போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் லலித் ஸ்ரீ குணருவனும் கலந்து கொண்டார்.
வரி, மோசடி, லஞ்சம் என்பவற்றை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கடந்த தேர்தலில் நாம் உறுதி அளித்தோம். இதனுடன் இணைந்ததாக பஸ் கட்டணங்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து பஸ் உரிமையாளர்கள் சங்கங்களை அழைத்து பேச்சு நடத்தினோம். பஸ் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான கொள்கையின் பிரசாரம் 8 முதல் 10 வீதத்தினால் கட்டணங்கள் குறைக்கப்படு கிறது. முதல் 5 கட்டண அளவுகளும் 10 வீதத்தினால் குறைக்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் கட்டணங்களும் குறைக்கப்படும். மக்களுக்கு சொகுசானதும் வசதியானதுமான போக்குவரத்து சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும்.
நாம் 16 வீதத்தினால் டீசல் விலைகளை குறைத்ததோடு கடந்த அரசாங்கம் 10 ரூபாவினால் விலைகளை குறைத்தது. இதனடிப்படையிலே பஸ் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – என்று அமைச்சர் குறிப்பிட்டார்.