கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்று பத்தொன்பதாவது நாளாக தொடரும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இராணுவம் தொடர்ச்சியாக குறித்த இடத்தில் நிலைகொண்டிருப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வன்முறையற்ற நெருக்குதல்களை கொடுக்கவேண்டும் எனவும், போராட வேண்டிய சூழ்நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமது கிராமத்தை இராணுவம் கையகப்படுத்தி பலன்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் தாம் அன்றாட வாழக்கையை கொண்டு நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக குற்றம்சுமத்தியுள்ளனர்.
எனினும் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.