பாரிஸ் Orly விமானநிலையத்தில் சூட்டுச் சம்பவம்: பயணிகள் வெளியேற்றம்!

0
216

பாரிஸ் Orly விமானநிலையத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பயணிகள் வெளியேற்றப்பட்டு அங்கு பெரும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.விமான நிலையத்தைப் பயன்படுத்துவதை தற்காலிகமாகத் தவிர்க்குமாறு பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு கடமையில் இருந்த இராணுவ வீராங்கனை ஒருவரது துப்பாக்கியைப்பறிக்க முற்பட்டபோது சக படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ய நேரிட்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது. துப்பாக்கியை அபகரிக்கமுயன்றவர் தப்பியோடி அங்குள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தினுள் ஒளிய முற்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் வெடிகுண்டுகள் காணப்பட்டன எனக்கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. விமானப்பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அங்கு தீவிர தேடுதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந்தச்சம்பவத்துக்கு முன்பதாக பாரிஸ் நகரின் புறநகரமான Stains என்னும் இடத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றுகாலை தலையில் சுடப்பட்டுக் காயமடைந்தார். வீதிச்சோதனைக்கடமையில் ஈடுபட்டிருந்த இவர் கார் ஒன்றை சோதனைக்காக மறித்தபோது அதில் இருந்த நபர் இவர்மீது சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார்.அவர் செலுத்திவந்த அந்தக் கார் பின்னர் வேறு ஒர் இடத்தில் அநாதரவாக விடப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிய நபரும் பின்னர் விமான நிலையத்தில் துப்பாக்கியைப் பறிக்க முயன்றவரும் ஒருவரே என நம்பப்படுகிறது.
இவ்விரு சம்பவங்களும் தீவிரவாதத் தாக்குதல்கள் என்ற கோணத்திலேயே விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது..தாக்குதலாளி படைப்பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்த ஓர் இஸ்லாமிய மதத்தீவிரவாத சந்தேக நபர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்து இருபது வருடங்களுக்குப்பின்னர் முதல் முறையாக அவரது புதல்வர் இளவரசர் வில்லியம் தனது துனணவியுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாரிஸ் வந்துள்ளார்.இவர்கள் இருவரும் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ளும் மாபெரும் றக்பி விளையாட்டுப்போட்டி இன்று மாலை தேசிய விளையாட்டரங்கில்( Stade de France) நடைபெறுகிறது.இதனால் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை-
ஜனாதிபதித்தேர்தல் வாக்களிப்பு நெருங்கும் சமயத்தில் -நாடு மேலும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துவருகிறது.பாரிஸ் நகரின் கேந்திரப் பகுதியில் அமைந்திருக்கும் சர்வதேச நாணய நிதியப் பணிமனைக்கு கிறிஸ் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட கடிதப் பொதி ஒன்றில் இருந்த சிறு குண்டு வெடித்ததில் பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.கடந்தவாரம் இடம்பெற்ற இச்சம்பவம் நகர மக்கள் மத்தியில் மீண்டும் தாக்குதல் பயபீதியை உருவாக்கியிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here