பிரதம நீதியரசர் பதவி விலகாவிடின் இன்று மக்கள் போராட்டம் வெடிக்கும்:சட்டத்தரணிகள் ஒன்றியம்!

0
200

CJ_assumes_office_2_0பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று காலை 9.00 மணிக்கு முன்னதாக தாமே விலகிச் செல்லவேண்டும். இல்லையேல் அவர் பதவி விலகும் வரை புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக மக்கள் போராட்டம் தொடரும் என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் ஒன்றியம் நேற்று தெரிவித்தது.

இன்று தமது ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்படும் மக்கள் போராட்டத்தில் காலை 8.30 க்கு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக அணி திரளுமாறும் மேற்படி ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று பிற்பகல் கொழும்பு ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலுள்ள தொழில் சார் நிபுணர்களின் சங்க கட்டடத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சட்டத்தரணி ஜே. சீ. வெலி அமுன, கலாநிதி நிர்மால் ரஞ்ஜித் தேவசிறி, சட்டத்தரணி சந்திரபால குமாரகே, சட்டத்தரணி லக்ஷான் டயஸ், பிரிடோ பர்ணான்டோ, ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை வண. சரத் இத்த மல்கொட ஆகியோர் உட்பட சட்டத்தரணிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலக்கவே மக்கள் தமது ஆணையை வழங்கினர். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்துக்குள் இருந் தவாறு அதன் பங்குதாரர்களாக இருந்தவர்களையும் விலகிச் செல்வதற் காகவே மக்கள் ஆணையை பயன் படுத்தினர்.

தகுதியற்ற ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தாமாக விலகிச் செல்ல வேண்டும். அல்லது அரசு இவரை விலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அமைதியான முறையில் மக்களின் போராட்டம் தொடரும்.

மக்கள் வழங்கிய ஆணையை உறுதிப்படுத்தும் செயலின் ஒரு கட்டமே இந்த மக்கள் போராட்டம், மக்கள் தெளிவான தீர்வையே வழங்கியிருக் கிறார்கள்.

எனவே சகலரையும் நாம் போராட்டத்துக்கு அழைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

பிரதம நீதியரசர் நிறைவேற்று அதிகாரத்தினுள்ளேயே வாழ்ந்தார். இவர் தேர்தல் நடைபெற்றதன் பின்னர் 9 ஆம் திகதி அதிகாலை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அடுத்த வேட்பாளரின் வீட்டிலேயே இருந்தார். இதற்கு சான்றுகள் உள்ளன. அவருக்கு இவ்வாறு அடுத்த வேட்பாளரின் வீட்டில் இருப்பதற்கு தார்மீக உரிமை கிடையாது.

பிரதம நீதியரசர் தனது கெளரவத்தை காப்பாற்றிக்கொண்டு தாமாகவே இன்று கலை 9.00 மணிக்கு முன்னதாக வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் மன்னராட்சிக்கு எதிராக நேபாளத்தில் மக்கள் போராட்டம் செய்தது போன்று பிரதம நீதியரசர் வெளியேறும் வரை மக்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

நாம் பிரதம நீதியரசரிடம் கேட்டது 9 ஆம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் இருந்தீர்களா? இல்லையா? என்பது தான். ஆனால் முதல் தடவையாக வரலாற்றில் மட்டுமல்ல உலகத்தில் எங்கேயும் இல்லாத விதத்தில் பிரதம நீதியரசர் பேச்சாளர் ஒருவரை நியமித்து தான் பதவி விலகிப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

நாம் கேட்டது ஒன்று அவர் பதிலளிப்பது வேறொன்றாக இருக்கிறது. எமது கேள்விக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதிலளிக்க வேண்டும்.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஷிரானி பண்டாரநாயக்காவை விலக்கியது சட்டவிரோதமானது. மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றதும் சட்டவிரோதமானது. எந்த வகையிலும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவிக்கு தகுதியானவர் அல்ல. முழுக்க முழுக்க பக்கச் சார்பானவர். இவரிடமிருந்து நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

இவர் பதவியிலிருந்தால் சட்டத்தின் ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை அற்றுப் போய்விடும். இவர் தனக்கு தூதர் பதவியொன்று வேண்டும் என்று கேட்டுள்ளார். தூதராக கூட நியமனம் பெற இவர் தகுதியற்றவர். இவர் நேர்மையானவர் அல்ல. இவ்வாறான ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பது ஆபத்தானது.

எனவே தான் இவரை பதவியிலிருந்து விலக்கும் வரை விலகும் வரை மக்களின் போராட்டத்தை அமைதியாக முன்னெடுக்க தீர்மானித்துள் ளோம் என்றனர்.

பிரதம நீதியரசர் ஒருவரை நீக்க என்ன வழிமுறைகள் உள்ளன? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, முதலில் அவருக்கு எதிராக பாராளு மன்றத்தில் ஒழுக்க வலு உரை பிரேரணை யொன்றை கொண்டுவர வேண்டும். இதன் ஊடாக பிரதம நீதியரசரை விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்படும்.

இந்த குழு தனது விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் பிரதம நீதியரசரை விலக்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்படும். இதன் பின்னரே அவரை விலக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்மை பொறுத்தவரையில் ஷிரானி பண்டாரநாயக் காவை விலக்குவதற்கான யோசணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே அவரே இன்னமும் பிரதம நீதியரசராகவுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here