கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று பதினெட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
138 குடும்பம் 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இன்று வரை சொந்த நிலத்திற்கு திரும்பாத நிலையில் மாதிரிக்கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரச காணியை தாம் கோரவில்லை எனவும் இராணுவத்தை வெளியேற்றி தமது சொந்த காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை 17 ஆவது நாளான நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்த மக்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவினை வழங்கும் பொருட்டும் இந்த மக்களின் நிலங்களை விடுவிக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் மகஜர் ஒன்றினைம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் ஒப்படைத்திருந்தனர்.
மக்களின் நியாமான போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் தமது பல்கலைக்கழக மாணவர்களது ஆதரவு என்றும் இருக்கும் என்பதோடு சொந்த நிலங்களை இராணுவத்திடம் தொலைத்து வாடும் இந்த மக்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க முன்வரவேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
போராட்டம் நடத்தும் மக்களுடன் இணைந்து போராட்டக்களத்தில் வீதியோரமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.