திருகோணமலை – கிண்ணியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அந்த கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் நேற்று முதல் மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் டெங்கு நோயினால் கிண்ணியாப் பகுதியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக கிண்ணியா – மாலிந்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பலியானார். கடந்த திங்கட்கிழமை கிண்ணியா – பைசர் நகரைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒரு வர் உயிரிழந்திருந்தார். இதேபோல் நேற்று முன்தினம் இரவு கிண்ணியாவை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் திருகோணமலை வைத்தியசாலையில் உயிரிந்துள்ளார்.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1150 க்கும் மேற்பட்டோர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் தெரிவித்தார்.
டெங்கு நோய் தாக்கம் காரணமாக பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைவிட இந்த நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதனால் கிழக்கு மாகாண ஆளுநர் , கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன் கலந்தாலோசித்தே பாடசாலைகளை மூன்று தினங்களுக்கு மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிண்ணாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இப்பணியில் முப்படையினர், பொலிஸார், இஸ்லாமிய அமைப்பினர், இளைஞர் கழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பெருந்தொகையானோர் பங்கேற்றுள்ளனர். வீடு வீடாக சென்று இவர்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.