சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய பிரேசில் நாட்டிற்கான சிறீலங்காத் தூதுவருமான ஜகத் ஜயசூரிய சிறீலங்கா வில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் நிறைவு கட்டத்தில் சித்திரவதை கூடமொன்றை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜகத் ஜயசூரிய வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் “ஜோசப் முகாம்“ என அறியப்பட்ட இடத்தில், கடந்த 2007ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 2009 ஜுலை மாதம் வரை சித்திரவதைக் கூடமொன்றை நடத்தி வந்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமில் சித்திரவதைகள் நடைபெற்றதை அவர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
கைவிலங்கிடப்பட்ட, கைதிகள் சங்கிலியால் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கவிடப்பட்டு மிகவும் மோசமான முறையில் சித்திரவதைக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கைதிகள் இரவு நேரத்தில் சத்தமிடுவது அடுத்தடுத்த கட்டடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு கேட்குமாயின் ஜகத் ஜகசூரியவிற்கு கேட்காமலிருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னரும் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பினர் இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் செயற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இரகசிய முகாம்கள் உள்ளடங்களாக 41 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாலியல் ரீதியாகவும் வேறு வழிகளிலும் துன்புறுத்தப்படுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அந்த சம்பவங்கள் தொடர்வதாக 2015ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தெரிவித்திருந்தார்.
திருகோணமலை இரகசிய கடற்படை புலனாய்வு முகாமின் செயற்பாடுகள், அங்கு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்குவோர் மற்றும் அவற்றை செயற்படுத்தும் நபர்கள் தொடர்பிலான புகைப்படங்கள் ஜீபிஎஸ் தொழில்நுட்பத்துடன் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வவுனியா “ஜோசப் முகாம்“ இராணுவ புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் வெள்ளை வான் கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்குவோர் தொடர்பிலான தகவல்களும் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 155 பேரின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் யஸ்மின் சூகா, வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் வதை முகாம் காணப்படுவதாக தெரிவித்த விடயத்தை ஒரு கட்டுக்கதையென கடந்த வருடம் மே மாதம் 11ஆம் திகதி அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடடத்தக்கது.