பொது போக்குவரத்துக்கு இடையூறு இன்றி இராணுவத்தின் செயற்ப்பாடுகளுக்கு இடையூ இன்றி தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இன்றி சாத்வீக போராட்டம் நடாத்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சம்சுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு சிறீலங்கா இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்று(16) கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நேற்று (15) உத்தரவிடப்பட்டது .
கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள தங்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு சிறீலங்கா இராணுவ தலைமையக வாயிலுக்கு முன்பாக இப்போராட்டம் நடாத்தப்பட்டு வருவதால் இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தடையுத்தரவுக்கோரி சிறீலங்கா காவல்துறையும் , இராணுவத்தினரும் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்(14) வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்றைய தினம்(15,03) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இடம்பெற்றது.
மன்றில் முன்னிலையாகியிருந்த முள்ளியவளை காவல்துறைப் பொறுப்பதிகாரி, மக்களின் போராட்டத்தினால் இராணுவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பான தெளிவுபடுத்தினார்.
எனினும் இப்போராட்டத்தில் உள்ள நியாயமான காரணங்களை மன்றில் எடுத்துக்கூறிய மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி திருக்குமரன்,மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சடடத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சடடத்தரணிகளும் மக்களிடம் இருந்தும் கருத்துக்களைப் பெற நீதிவான் அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று மக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறவுள்ளதாக அறிவித்திருந்ததோடு வழக்கை இன்று வரை ஒத்திவைத்தது. இந் நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மக்கள் சார்பாக சட்டத்தரணி திருக்குமரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இனைந்து மக்களின் போராட்டத்தின் நியாயத்தை எடுத்து கூறினர் இருதரப்பினரதும் சாட்சிகள் கருத்துக்கள் ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலித்த நீதவான் மேற்ப்படி உத்தரவை பிறப்பித்து 14 நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார்.
நீதிமன்ற கட்டளையை மீறும் வகையில் மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை குழப்பவோ அல்லது போராட்டத்தை மேற்கொண்டுவரும் மக்களின் கூடாரங்களை அகற்றவோ இராணுவத்தினரும், காவல்துறையினரும் முயசிக்கக்கூடாது என்றும் ஜனநாகய ரீதியிலான போராட்டங்களுக்கு இந்த நாட்டின் சடடத்தில் இடம் உண்டு என்பதனையும் சுட்டிக்காட்டி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.