சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 பணியாளர்களுடன் கடத்தப்பட்ட சிறீலங்காகப்பலை விடுவிக்க கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலானது சிறீலங்காவிற்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என சிறீலங்கா கடற்படை நேற்று தெரிவித்திருந்தது.
சிறீலங்காவின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான அரிஸ் 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அக் கப்பலை விடுவிப்பதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமிகள் குழுவை மீட்க சோமாலிய அரசு படையினரை அனுப்பிவைத்துள்ளது.
இதுபற்றித் தெரிவித்த சோமாலிய அரசு அதிகாரியொருவர், “கடத்தப்பட்ட கப்பல் மற்றும் மாலுமியரை விடுவிப்பது நமது பொறுப்பும் கடமையுமாகும். இதற்காக நாம் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். கடற்கொள்ளையர்கள் தாம் கடத்தும் கப்பல்களை ஆலுலா என்ற துறைமுக நகரை அண்டியே மறைத்து வைப்பார்கள். குறித்த அந்தப் பகுதியை நோக்கி தேவையான படையினர் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கப்பலையும் மாலுமிகளையும் மீட்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா மாலுமியர் குழுவுடன் பயணித்த ‘ஏரிஸ் 13’ என்ற இந்த எண்ணெய்த் தாங்கிக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் நேற்று கடத்திச் சென்றனர். சுமார் 1800 தொன் எடையுடைய இந்தக் கப்பல் பனாமா கம்பெனி ஆமி ஷிப்பிங் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது.
2012ஆம் ஆண்டுக்குப் பின் சோமாலிய கடற்கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காட்டிய முதல் சம்பவம் இது.