கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் இன்று 15ஆவது நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப முயற்சி !

0
120


கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் இன்று 15ஆவது நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி திட்டம் தீட்டிக்கொண்டு அவர்களின் அமைதிக்கு இடையூறு என கூறி பொலிஸாரையும் இணைத்துக்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்று 15 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடத்தையும் வாழ்வியலையும் மீட்டுக்கொள்வதற்காக இன்று 15ஆவது நாளாகவும் போராடிவருகின்றனர். அவர்களின் அகிம்சை ரீதியான அமைதியான போராட்டத்துக்கு எதிராக இராணுவம் இன்று நீதிமன்றை நாடியுள்ளதாக அறிகிறோம்.
எமது கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு வீதியை பலாத்காரமாக மறித்து வைத்திருக்கும் இராணுவத்தின் செயல் சரியா.? அல்லது எமது மக்களின் வாழ்விடங்களை பறித்து வைத்திருக்கும் இராணுவத்தின் செயல் சரியா.? என்பதற்கான நீதி நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழங்கப்படவுள்ளதாக அறிகிறோம். நிச்சயமாக நீதி வெல்லும் இந்த மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். இந்த இராணுவம் எமது பாதையில் இருந்து விலகி எமது பாதை உடனடியாக திறந்துவிடப்படவேண்டும். மக்களின் வாழ்விடங்களை விட்டு இந்த இராணுவம் வெளியேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
15ஆவது நாளாக நடைபெறும் இப்போராட்டத்தில் தம்முடைய பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக கவலை வெளியிட்ட மக்கள் தமது காணிக்குள் செல்லாது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கின்றனர்.
கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் மக்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிலையிலேயே கேப்பாபிலவு மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தமக்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக இராணுவம் நவீன கமரா ஒன்றை இரகசியமாக பொருத்தி மக்களை ஒளிப்பதிவு செய்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here