அரசாங்க திறைசேரிக்குரிய 100 கிலோ தங்கத்தை மோசடியாக விற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சார்பாக அவரது மனைவி சியாமலி பெரேரா நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவிக்கு இந்த மோசடியுடன் தொடர்பிருப்பதாகவும் இதன் காரணமாக வாஸ் குணவர்தனவுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்ட
அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். எனது கணவர் வாஸ் குணவர்தனவின் கோரிக்கைபடி இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்தேன். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி பராக அவர் கடமையாற்றிய போது திறைசேரிக்குரிய 100 கிலோ தங்கத்தை மோசடியாக விற்க முயற்சி நடப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக அவர் விசாரணை நடத்திய போது இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இடையூறு ஏற்பட்டது. பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது.
வாஸ் குணவர்தனவுக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகளை சோடிப்பதாகவும் பிள்ளைகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் அச்சுறுத்தப்பட்டது. கைக்குண்டு தாக்குதல் கூட நடத்தப்பட்டது.
மேலும் பல தகவல்கள் வாஸ் குணவர்தனவிடமுள்ளன. அவற்றையும் வெளியிட அவர் தயாராக இருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இந்த தகவல்களை வாஸ் குணவர்தனவின் கோரிக்கை படி வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.