தமிழக மீனவர்கள் முற்றாகப் புறக்கணிப்பு – சோபையிழந்ததது கச்ச தீவு

0
128


இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார விழாவாகக் கொண்டாடப்படும் கச்ச தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இந்த முறை சோபையிழந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து எவரும் கச்சதீவுக்கு வருகை தரவில்லை. கடல் எல்லையில் தமது மீனவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து கச்சதீவுக்கு வருகை தராது புறக்கணித்துள்ளனர் தமிழக மக்கள்.
இலங்கையில் இருந்து வழக்கம்போல் யாத்திரிகர்கள் நேற்றுப் முன்தினம் (10)பிற்பகல் முதல் கச்சதீவை வந்தடைந்தனர். குறிகாட்டுவான் துறையில் இருந்து புறப்பட்ட படகுகள் மூலம் அவர்கள் கச்சதீவை வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
வழக்கமாக தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்வார்கள். அவர்கள் மீன்பிடிப் படகுகளில் வந்து அந்தோனியாரைப் பக்தியோடு தரிசித்துச் செல்வார்கள்.
அதனால் இந்திய மற்றும் ஈழத் தமிழர்களின் கலாசார நிகழ்வாக கச்சதீவு கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இரு பகுதி தமிழ் உறவுகளும் ஒருவரை ஒருவர் நட்புப் பாராட்டிக்கொள்ளவும் அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் அது களம் அமைத்து வந்தது. ஆனால் இந்தத் தடவை ஒட்டுமொத்த அன்பும் முறிந்துள்ளதாகத் தாம் உணர்கின்றனர் என்று ஆலயத்துக்கு வந்திருக்கும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை – இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர் ஒருவர் சிறீலங்கா கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழக மக்கள் யாரும் கச்சதீவுக்கு வருகைதரவில்லை.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கச்சதீவுக்குப் போகமாட்டோம் என்றும் ஏனையவர்கள் செல்வதற்கு வசதியாக தமது படகுகளையும் அனுப்ப மாட்டோம் என்றும் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் தமிழகத்தில் இருந்து மக்கள் எவரும் வரவில்லை. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கத்தோலிக்கக் குருமாரும் வருகை தரவில்லை.
இதனால் வழக்கமான சோபையை இழந்த நிலையிலேயே கச்சதீவுத் திருவிழா ஆரம்பமாகி இருக்கிறது. இன்று காலையில் நிகழும் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் திருவிழா நிறைவுக்கு வரும். இந்தத் திருப்பலியை வழக்கமாக இலங்கை – இந்தியக் குருமார் இணைந்தே நடத்துவார்கள். போர்க் காலத்தில்கூட தமிழகக் குருமார்கள் வருகை தந்திருந்தனர். ஆனால் இன்று நடக்க இருக்கும் திருப்பலியை யாழ்ப்பாண கத்தோலிக்க குருமார்களே நிகழ்த்த உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here