வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கான முன்முயற்சிகளில் புதிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவே தெரிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் மாலை மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனை அவரது இல்லத்தில் சந்தித்து வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். இரு மணிநேரம் நடைபெற்ற இந்தப்பேச்சுவார்த்தையின் போது மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதலமைச்சர் வலியுறுத்தியதுடன் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கியுள்ளார்.
வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையில் நானும் கலந்து கொள்வேன். இடம் பெயர்ந்த மக்களை பகுதி பகுதியாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பையடுத்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு போதுமான காணிகள் உள்ளன. அந்த வகையில் காணி உறுதி உள்ளவர்கள் முதற்கட்டமாக உள்வாங்கப்படுவர். அதனைத் தொடர்ந்து ஏனையவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். இந்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். அவர்களது அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றும் மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தை 1990 ஆம் ஆண்டு இராணுவம் கைப்பற்றியதையடுத்து 45 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து மக்கள் வெ ளியேற்றப்பட்டனர். யுத்தம் தொடர்ந்து வந்த நிலையில் பலாலி படைத்தளம் மற்றும் விமான நிலையம், காங்கேசன்துறைமுகம் போன்றனவற்றை சூழவுள்ள பகுதிகள் அதிபாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்படாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு அதிபாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் தம்மை மீளக்குடியேற்றுமாறு மக்கள் அன்றுதொட்டு கோரிவந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா உட்பட சிலர் தமது பகுதிகளில் சென்று குடியேற அனுமதி வழங்கப்படவேண்டுமென்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் இது குறித்து விசாரித்து இடைக்காலத் தீரவொன்றையும் வழங்கியிருந்தனர். மனுதாரர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் ஆராயுமாறு யாழ். மாவட்ட செயலாளருக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுமிருந்தது.
ஆனால் அதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்காலத்தின் போது 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து அதிபாதுகாப்பு வலயங்கள் இல்லாது செய்யப்பட்டு தாம் தமது பகுதிகளுக்கு சென்று மீள்குடியேற முடியும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றபோதிலும் அந்த எதிர்பார்ப்பு இன்னமும் கானல் நீராகவே மாறியிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிபாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வலிகாமம் வடக்குப் பகுதியில் 6300 ஏக்கர் காணிகளை படையினரின் தேவைக்கென சுவீகரிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட இடங்களில் அமைந்திருந்த ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகள் என்பனவும் படைத்தரப்பினரால் இடித்து அழிக்கப்பட்டன. இந்த காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக 2176 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் இருந்த வீடுகள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் நீதிக்கு மாறாக இடித்து அழிக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பிலும், எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வலிகாமம் வடக்கு மக்கள் ஒன்றிணைந்து பல தடவை சத்தியாக்கிரகப் போராட்டங்களிலும், ஈடுபட்டனர். இவ்வாறு தெல்லிப்பழையில் இடம் பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். தற்போது அவரது தலைமையிலான அரசாங்கமே பதவியிலுள்ள நிலையில் இந்த மக்களை மீள்குடியேற்றவேண்டியது அவசியமானதாகும்.
வடக்கில், வலிகாமம் வடக்கு உட்பட பல பகுதிகளிலும் இவ்வாறு அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதேபோல் கிழக்கில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த சம்பூர் பகுதியில் சுமார் 4000 பேருக்கு சொந்தமான 1100 ஏக்கர் காணிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் பின்பற்றப்படாமல் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சுவீகரிக்கப்பட்டது. இந்த இடத்தில் எட்டுக்கோயில்கள், ஆறு பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் பொதுமக்களின் வீடுகள் இருந்த போதிலும் அவை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சம்பூர் பகுதியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளிலும், மக்களை குடியேற்றவேண்டியது இன்றியமையாததாகும். இதேபோல் குச்சவெளிப்பகுதியிலும், அதிபாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மக்கள் குடியமர்த்தப்படாத நிலை காணப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம் பெற்ற யுத்தத்தில் சிக்கி தமிழ் மக்கள் தமது உயிர்களையும், உடைமைகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படவேண்டும். இதன் முதற்கட்டமாக இடம் பெயர்ந்த மக்களை முழுமையாக மீள்குடியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பச் செய்யவேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது எதிரணியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட போது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது அவருக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இந்த ஆதரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் முன்னைய எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுடனும் எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுடனும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுக்களின் போது இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் அவர்களிடம் கையளிக்கப்படும் என்று மூன்று தலைவர்களும் உறுதியளித்திருந்தனர்.
இதற்கிணங்கவே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இதற்குரிய அழுத்தங்களை கொடுத்து இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நாட்டில் தற்போது அமைதி நிலவுகின்றது. வெறும் அரசியலுக்காகவே கடந்த அரசாங்க காலத்தில் புலிகளால் மீண்டும் அச்சுறுத்தல் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியான ஒருநிலைமை தற்போது இல்லை.
எனவே இதயசுத்தியுடன் பல்லாண்டு காலமாக தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறி அல்லல் படும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.