ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமை யாக நிறைவேற்றுமாறு வடக்கு மாகாண சபையில் கோரும் பிரேரணை நேற்றைய அமர்வில் வாதிக்கப்படவில்லை.
இந்தப் பிரேரணை தொடர்பாக ஆராய வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. வடக்கு மாகாண சபையின் சபை நடவடிக்கை குழுவால் இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் வாசகங்கள் அடங்கிய பிரேரணை நேற்றைய அமர்வில் முன்மொழியப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்தப் பிரேரணை தொடர்பாக விரிவாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்று வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.
வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராடம் காரணமாக மாகாண சபையின் நேற்றைய அமர்வு வழமையாக ஆரம்பிக்கப்படும் நேரத்திலும் பார்க்க பல மணி நேரம் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டது.