நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் 21-வது நாள் போராட்டத்தின் போது 65 வயது பொன்னம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து 21வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் அணியணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாட்டில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளோடு போராட்டம் நடைபெற்றது. அதேபோல் நல்லாண்டர்கொல்லையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு அருகே அப்பகுதி பெண்கள் கூடி ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் (65) என்ற மூதாட்டியும் கலந்துகொண்டார். இந்த ஒப்பாரி போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய பொன்னம்மாள் மயங்கி விழுந்தார். இதையடுத்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இதையடுத்து, அவருக்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் நெடுவாசல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.