இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, இரண்டு படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட 10 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலையிலிருந்து கடந்த 3 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களே நாகபட்டின கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில் சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒரு மீனவர் கொல்லப்பட்டு இன்னும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் , இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.