பிரான்சின் தலைநகர் பாரிசில் போர்த்து லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2014 நிகழ்வுகள் 27.11.2014 வியாழக்கிழமை அன்று மிக எழுச்சிகரமாக இடம்பெற்றிருந்தன.
இதேவேளை பாரிஸ் பன்தன் பகுதியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் நடுகல்கள் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகிய அதேவேளை, போர்த்துலாச்சப்பல் பகுதியில் 12.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொதுச்சுடரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உப பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, மணி ஒலிக்கப்பட்டது. மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 08.02.1999 இல் கச்சதீவுக் கடலில் வீரகாவியமான கடற்கரும்புலி மேஜர் வாமன் 05.02.2009 இல் கேப்பாப்புலவுத் தாக்குதலில் வீரகாவியமான கப்டன் நகுலன் ஆகிய இரு மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.
துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், பொதுமக்கள் அணிவகுத்து மாவீரர்களுக்கு கண்ணீர் காணிக்கையோடு சுடர்ஏற்றினர்.
அடுத்து 13.01.1994 இல் வீரச்சாவடைந்த கடற்புலி சுதாஜினியின் தாயார் மலர் வணக்கம் செய்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவீரர் நினைவு சுமந்த பேச்சுக்கள், நடனம், பாடல், எழுச்சிக் கவிதைகள் என்பன அரங்கை அலங்கரித்திருந்தன. இவற்றின் நடுவே பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்,மாநகரசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றன.
( Mme Marie George Buffet President de Groupe d’etude Tamoul a la assemblée nationale- Depute de Seine Saint Denis
Mons Patrick Jarry Maire de Nanterre
Mons Stephan Gatignon Maire de Sevran
Mons George Mothron Maire de Argenteuil
Mme Mireille Gitton Conseillere regionale d’ile de France-
Mons Serge Setterahmane- Conseille Municipal de Clichy
Mons David Fabre Conseillor Municipal de Savigny sur orge
Mme Renéé Mignot MRAP
Mons Yekoum Conseil Democratique de Kurdhistan
Mons Pierre Marcie Parti Communiste Français)
குர்திஸ்தான் மக்களின் சார்பில் குர்திஸ்தான் இளைஞர் அணித் தலைவரும் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கான தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் சுரேஸ் அவர்களின் உரையும் இடம்பெற்றிருந்தது. வழக்கறிஞர் உரையும் திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரின் ‘துணிச்சல்” நாடகம் இன்று தாயகத்தில் எமது மக்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தியது.
தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியரும் தமிழின உணர்வாளருமான திலீபன் நிகழ்த்தியிருந்தார். எமது மக்கள் ஒன்றுபட்டு உணர்வோடு போராடவேண்டிய தேவையை வலியுறுத்தியதாக அவரது உரை அமைந்திருந்தது.
மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிக்கான பரிசில் 93 விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.
இந்நிகழ்விற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.