தனது மகன் உள்ளிட்ட 11 பேரை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட குழுவினர் கடத்திச்சென்று திருகோணமலை முகாமில் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும், இதுவரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லையென்றும் தாயொருவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரின் உறவினர்களால் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தாயொருவர் இக்கருத்தை தெரிவித்தார்.
இக் கடத்தலுடன் தொடர்புடையவர்களே இலங்கையில் இடம்பெற்ற சகல கடத்தல்களுடனும் தொடர்புபட்டுள்ளனர் என குறித்த தாய் தெரிவித்தார். இவ்விடயம் அரசாங்கத்திற்கும் தெரிந்திருப்பதாலேயே இதனை மூடி மறைத்து வருவதாகவும் அத் தாய் தெரிவித்தார்.
மேலும், திருகோணமலையில் ரகசிய முகாம் இல்லையென்றும் ராணுவத்தினரால் இளைஞர்கள் கடத்தப்படவில்லையென்றும் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தாலும், ரகசிய முகாம் காணப்பட்டமை மற்றும் ராணுவத்தினர் இளைஞர்களை கடத்தியமை என்பன குறித்து வழக்கு நடைபெற்று வருகின்றதென சுட்டிக்காட்டிய குறித்த தாய், அரசாங்கத்திற்கு இவ்விடயம் தெரியும் என்பதால் தன்னுடைய மகன் எங்கிருந்தாலும் தேடித்தர வேண்டுமென வலியுறுத்தினார்.