கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்றால் தற்போதைய பாடசாலைப் பருவத்தினரைத் தவிர இப் படுகொலை பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக வைத்த படுகொலையாக இப் படுகொலை காணப்பட்டதுடன் சர்வதேச அரங்கிலும் இப் படுகொலையின் கொடூரம் வெளிக்கொணரப்பட்டது.
அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப் படுகொலையினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று அம்பலப் படுத்தியவர் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப் பரராசசிங்கம் அவர்களே இப் படுகொலையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலான செயற்பாட்டால் சர்வதேசத்தில் குறிப்பிட்ட காலம் இப் படுகொலை பற்றிய பேச்சு பிரபல்யமாகக் காணப்பட்டதுடன் அக் காலப்பகுதியில் லண்டன் பி.பி.சி.யிலும் இப் படுகொலை பற்றி அதிகமாக கதைக்கப்பட்டது.
இப் படுகொலையினை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு வரை அமைக்கப்பட்டு அனைத்து விசாரணைகளும் புஸ்வாண மாகச் சென்றது. சர்வதேச அளவில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இப் படுகொலை கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்று அழைக்கப்பட்டாலும் முதலைக்குடா மகிழடித்தீவுக்கும் மண்முனைத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் அக் காலப் பகுதியில் பாரிய இறால் பண்ணை அமைந்திருந்தது. இந்த இறால் பண்ணையின் உரிமையாளராக மட்டக்களப்பு மாவட்ட சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த அருண் தம்பிமுத்துவின் தந்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து காணப்பட்டார்.இந்த இறால் வளர்ப்புப் பண்ணையில் தான் இப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. இறால் பண்ணை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருந்த இந்த இறால் பண்ணையில் பண்ணையை அண்மித்த கிராமங்களில் உள்ள வறிய மக்கள் அண்கள் பெண்கள் இளைஞர்கள் என பெருமளவிலானோர் வேலை செய்து வந்தனர். 1987.01.28 அம் திகதி காலை வழக்கம் போல் இறால்ப் பண்ணையில் தொழிலாளர்கள் தத்தமது கடமைகளை மேற்கொண்டவாறு காணப்பட்டனர்.வழமைக்கு மாறாக இறால்ப் பண்ணையைச் சுற்றி நாலா புறமும் படையினர் சூழ்ந்த நிலையில் கொக்கட்டிச்சோலை மற்றும் அயல் கிராமங்களில் உள்ள சிறிலங்கா படை முகாங்களில் இருந்தும் படையினர் இறால் பண்ணையினை நோக்கிச் சூழ்ந்தனர்.ஆவேசத்துடன் உள்ளே நுளைந்த படையினர் கண் மூடித்தனமாக பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.
இதனை எதிர்பாராத பொதுமக்கள் மரணப் பீதியில் நாலாபுறமும் ஓட பண்ணையினை சுற்றி நின்ற படையினர் உயிர் தப்ப ஓடியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்க ஆண் பெண் இளைஞர்கள் வேறுபாடின்றி அப்பாவி பொது மக்கள் 100ற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர் ஒரு சிலரே உயிர் தப்பினர்;. ஒரே குடும்பத்தில் பலர் கூட இதன்போது படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் இப் படுகொலைக்குள்ளாக்கப்பட்டவாகள் அனைவரும் உறவினர்களாகவே காணப்பட்டனர்.ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலமாகக் காணப்பட்டது. இப் படுகொலைதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கொக்கட்டிச்சோலையின் பெயரும் சர்வதேச ரீதியில் பிரபல்யமடையக் காரணமாக இருந்தது.
இப் படுகொலைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசசிங்கம் சர்வதேச ரீதியாக குரல் எழுப்பியதனால் பல தரப்பினராலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவும் சர்வதேச ரீதியாக தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக அப்போதய அரசாங்கம் ஒரு கண்துடைப்புக்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை விசாரணைக்கு நியமித்தது.இவ் விசாரணையானது பல மாதங்கள் நீடித்தது.இவ் விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசசிங்கம் உட்பட பல பொதுமக்களும் ஆணைக்குழு முன்பாக வாக்கு மூலம் அளித்திருந்தனர். விசாரணையின் முடிவில் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் படையினர் தமது பொறுப்புக்களை மீறி நடந்து கொண்டுள்ளதாகவும் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதற்கு காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு அப் படையினருக்கும் படை அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் குறித்த படையினருக்கும் படை அதிகாரிகளுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது பதவி உயர்வு வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கிய சம்பவமே இடம்பெற்றது. ஆணைக்குழு மூலம் நியாயங் கிடைக்கும் என எதிர்பார்த்த பாதிக்கப்பட்ட மக்களும் வாக்கு மூலமளித்தவர்களும் ஏமாற்றம் அடையப்பட்டனர். அன்றைய அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையின் ஓர் அங்கமாகவே கொக்கட்டிச்சோலை படுகொலை நடந்தேறியது..அதனை மூடி மறைப்பதற்காக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட திட்டமே ஜனாதிபதி ஆணைக்குழு அதன் மூலமாக அனைத்து விடயங்களையும் உள்நாட்டிலும் வெளிடாட்டிலும் அவரால் திசை திருப்பப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகளில் ஆரம்பத்தில் இடம்பெற்ற படுகொலையாக கொக்கட்டிச்சோலைப் படுகொலை வரலாற்றில் பதிவாகியுள்ள அதே வேளை இப் படுகொலை மூலம் உறவுகளை இளந்தவர்கள் இன்றும் அவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.