மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் எதிர்வரும் 28ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 12.00மணிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதாக பட்டிப்பளை பிரதேச தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் “கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியலும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சுமந்திரன், பொன்.செல்வராஜா, சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
1987 ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.