நெடுவாசல் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரி நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து 18 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு, எதிர்க்கட்சித் தலைரான மு.க. ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் விவசாயி அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மாநில அரசு சொன்னாலும், மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் உறுதியாய் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆட்சியர் அளவிலான பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18வது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் கரு. பழனியப்பன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ், ஏற்கனவே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது களத்தில் மாணவர்களோடு நின்று ஆதரவு தெரிவித்தார். அதனைப் போன்றே தற்போது தமிழர்களின் மற்றொரு பிரச்சனையான நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.