இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கேப்பாபிலவு மக்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
கேப்பாவிலவு மக்கள் நடத்தும் தொடர் அறவழிப் போராட்டத்துக்கு தொடர் அறவழிப் போராட்டத்தின் மூலம் தமது நிலங்களுக்குச் சென்ற பிலக்குடியிருப்பு பொதுமக்களும் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி கேப்பாப்பிலவு முகாமுக்கு முன்பாகத் தகரக் கொட்டகை அமைத்து கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ச்சியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்பாபுலவு இராணுவ பாசறை அல்ல! அது நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி!எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்த தடை? 5வது நாளாக தொடரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண் மீட்பு போராட்டம்.!
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் எத்தகைய அச்சுறுத்தலை விடுத்தும் தமது போராட்டத்தை நிறுத்திவிட முடியாது எனவும் சொந்த மண்ணில் கால் பாதிக்கும் வரை தமது மண்மீட்பு போர் தொடருமெனவும் தெரிவித்துள்ளனர்.
5வது நாளான இன்றையதினம் அருட் சகோதரிகள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் மக்களை சந்;தித்து தமது ஆதரவினை வெளியிட்டனர். அத்தோடு நாலாவது நாளான நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்களை சந்;தித்து தமது ஆதரவினை வெளியிட்டார்.