முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு பகுதி நாளை விடுவிக்கப்படும் என்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கேப்பாப்புலவில் மக்களின் காணிகளில் ஒருபகுதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக் குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே நாளை முதல் இக்காணிகளை படிப்படியாக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று சிறீலங்கா ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
படையினர் வசமிருந்த முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு நிலக்குடியிருப்பு காணிகள் முழுவதுமாக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 42 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் இதனை விமானப்படையினரே இதுவரை காலமும் தம்வசம் வைத்திருந்தனர்.
புதுக்குடியிருப்பில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அரசாங்கம் இக்காணிகளைப் படிப்படியாக விடுவிக்கத் தீர்மானித்துள்ளது.
மூன்று கட்டங்களாக இந்த காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதுடன் நாளை 4ம் திகதி முதற்கட்ட காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளது. அடுத்து 3 மாத காலத்திலும் அதற்கடுத்து 6 மாதகாலத்திலும் இந்த காணி விடுவிப்பு இடம்பெறும். பெரும்பாலும் அம்மக்கள் நாளை மறுதினம் தமது போராட்டத்தைக் கைவிடுவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.