இந்த மண் எங்களின் சொந்த மண் என்று இசை வேள்வியை ஆரம்பித்து எழுச்சிப்பாடகராக தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார் என்ற செய்தியானது தமிழர் உள்ளமெங்கும் மாறா சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களது சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த எமது விடுதலைப் போராட்டத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் இடையே இசைவழியே பாலம் அமைத்து பலம் சேர்த்திருந்த எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற எழுச்சிக் கானங்கள் இன்னும் பல களங்களில் எம்மை வேங்கைகளாக உணர்வூட்டிக் கொண்டிருக்கும் என்பது திண்ணம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியை உலகத் தமிழர் நெஞ்சங்களுக்கு கடத்தி உணர்வெழுச்சிகொள்ளச் செய்த சாந்தன் அவர்களின் இழப்பானது எக்காலத்திலும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் துயரத்தில் பங்கேற்பதோடு அன்னாரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!