வலிகாமம் வடக்கில் மக்களை மீள் குடியமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அந்தப் பேச்சு வார்த்தையில் நானும் கலந்து கொள்ளவுள் ளேன்.
இடம்பெயர்ந்த மக்களை பகுதி பகுதியாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்கள் முன் எடுக்கப்படும் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித் தார். வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு போதுமான காணிகள் உள்ளன.
அந்த வகையில் காணி உறுதியுள்ளவர்கள் முதற் கட்டமாக உள்வாங்கப்படுவர். அதனைத் தொடர்ந்து ஏனையவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் இந்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் அதேவேளை அவர்களின் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
நேற்று மாலை கொழும்பிலுள்ள மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுடைய இல்லத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலையடுத்தே அமைச்சர் சுவாமிநாதன் இதனை தெரிவித்தார். நேற்று மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையானது சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்தன.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
வலிகாமம் வடக்கில் சுமார் 6000 ஏக்கர் காணி காணப்படுகிறது. அந்தக் காணிகளில் மக்களை மீள்குடியமர்த்தலாம். அவ்வாறு மீள்குடியர்த்தும்
போது முதற்கட்டமாக காணி உருத்துடையவர்களை குடியமர்த்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
வலிகாம வடக்கில் மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண அமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் மேற் கொள்ளவுள்ள பேச்சுவார்த்தையில் என்னையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் அதற்கு நானும் இணக்கம் தெரிவித்தேன்.
அத்தோடு தமிழ் மக்கள் முகம்கொடுக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டது. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பேசப்பட்டது.
அதாவது எதுவித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நீதி கிட்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றும் வழக்கு தொடரப்பட்டு இழுக்கடிக்கப்பட்டு வரும் வழக்குகளை துரிதப்படுத்தி அதன்மூலம் நியாயம் கிட்டச் செய்தல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அகதிகளாக சென்று இந்தியாவில் இருக்கும் இலங்கையர்கள் மீண்டும் இங்கு வரும்போது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்ற காரணத்தினால் அவர்கள் இலங்கை வருவதை விரும்பாதிருப்பது தெரியவருகின்றது.
எனவே, அவ்வாறான அசௌகரியங்களை தவிர்த்து அவர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திகொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவுள்ளோம் அத்தோடு எதிர்வரும் பெப்ரவரிமாதம் 20ஆம் திகதி இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் 40பேர் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார்கள் அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது வடமாகாண மீள்குடியேற்ற அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மீன்பிடிதுறை அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.