முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மற்றும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்குப் பேரவை, காத்தான்குடி அரசியல்களம் ஆகிய அமைப்புக்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடாத்தியிருந்தன.
‘எங்கு பிரிவு கண்டோமோ அங்கிருந்து ஆரம்பிப்போம்’ ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, ‘நல்லாட்சி அரசாங்கத்தில் எமது நிலம் எமக்கு வேண்டும், அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி வாழ விடு’ ‘கேப்பாப்புலவு மக்களின் வாழ்விடங்கள் எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்பட வேண்டும்’ போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஆதரவாளர்கள் ஏந்தியிருந்ததைக் காணமுடிந்தது.
அண்மைக்காலமாக காணாமல் ஆக்கப்பட்டோர், மீள்குடியேற்றம் மற்றும் காணிவிடுவிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதுடன் அவற்றிற்கான ஆதரவுகள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.