ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்

0
233


தமிழ்நாடு புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஓரிடத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு மற்றொரு இடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்படும் இந்த எரிவாயு திட்டத்தால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் என்ற தகவல் விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் விளைச்சல் காணும் பழ வகைகள், காட்டு தாவரங்கள், வாழை போன்ற பயிர்கள் அழிந்துவிடும் நிலையும் உருவாகி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வடகாடு, கோட்டைகாடு, கருக்காகுறிச்சி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வுப்பணி மேற்கொள்ள வரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி கிராம மக்கள் நெடுவாசல் கிராமத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் இரவிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சமூக வலைதளங்களின் உதவியினால் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த புரிதல் ஏற்பட்டது என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டது போல் நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டுக்காக நடந்த யுகபுரட்சியால் சட்டம் இயற்றப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here