வடக்கில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதும் முக்கியமானதாகும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறுபான்மை மக்கள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிறுபான்மை மக்கள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஐ நாவின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பித்துள்ள தனது விபரமான அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் முன்னுரிமை நடவடிக்கையாக வடக்கில் படையினர் வசம் காணப்படுகின்ற பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். கரையோரப் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக ஒரு முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாத காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். எந்தவிதமான முறையான செயற்பாடுகள் இன்றியும் நட்டஈடு இன்றியும் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள் வழங்கப்பட வேண்டும் அல்லது நட்டஈடு வழங்கப்பட வேண்டும். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் அகற்றப்படுகின்றமையானது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமானது மட்டுமன்றி ஒரு அடையாளத்துக்காகவும் செய்யப்பட வேண்டும்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக முன்வைக்கப்படும் சட்டம் சர்வதேச தரங்களைப் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை மக்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் அமைப்புக்குட்பட்ட விசேட ஆணைக்குழு ஒன்றும் உருவாக்கப்படுவதும் அவசியமாகும் எனவும் ஐ.நா. விசேட நிபுணர் பரிந்துரை செய்திருக்கிறார்.
தேசிய நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்காகவும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காகவும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அரசாங்கத்துக்கும் நாட்டின் சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. அத்துடன் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலைமை ஆராயப்படாமல் உள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.